
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்க கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நேற்று முன்தினம் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து நேற்று காலை 8.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
இந்நிலையில், இது வடகிழக்கு நோக்கி நகர்ந்து இன்று காலை மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து மத்திய கிழக்கு வங்க கடலில் வரும் நாளை (25 ஆம் தேதி) காலை புயலாக மாற வாய்ப்புள்ளது.
தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையை நாளை மறுநாள் (மே 26 ஆம் தேதி) மாலைக்குள் தீவிரப்புயலாக கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பெருங்கடலில் உருவாகும் புயலுக்கு பெயரிடும் முறைப்படி இந்த முறை ஓமன் நாடு பரிந்துரைத்த ரிமல் என்ற பெயர் இந்த புயலுக்கு வைக்கப்பட உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் நெல்லை, குமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்குமாறு மீன்வளத்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது
