கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கலகோபசந்திரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பாப்பிரெட்டி (48) இவருக்கு மஞ்சுளா (37) என்ற மனைவியும், புனித்ரெட்டி (12) என்ற மகனும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள பாப்பிரெட்டி அவ்வப்போது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அதிக அளவு மது குடித்த பாப்பிரெட்டி குடிபோதையில் வீட்டிற்கு சென்று மனைவி மஞ்சுளாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கணவன் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான சண்டையில் மஞ்சுளா தனது கணவனை களி கிண்டும் கட்டையால் தலை, கை, கால் மற்றும் உடலில் பலமாக அடித்துள்ளார்.
இதில் பாப்பிரெட்டிக்கு உடலில் இரத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை குறித்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து போலீசார் பாப்பிரெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவனை அடித்து கொலை செய்த குற்றத்திற்காக மனைவி மஞ்சுளாவை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
