பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதற்கு சசிகலா வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சசிகலா தெரிவித்துள்ளதாவது:
’’பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் நடப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கிய மனு பாக்கர் அவர்கள், அடுத்து நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவிலும், இந்திய வீரர் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து வெண்கலம் வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ளார். ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே இந்திய வீராங்கனை மற்றும் பெண் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ள மனு பாக்கர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்று ஆண்களுக்கான துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலைகள் பிரிவில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று சாதனை படைத்ததற்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை மூன்று வெண்கல பதக்கங்களை வென்றுள்ள நமது இந்திய வீரர்கள், வீராங்கனைகள் இன்னும் பல வியத்தகு சாதனைகள் படைத்திட எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

