ரயில்வே லோகோ பைலட்டுகளின் நிலைமையை முன்னேற்ற இந்தியா கூட்டணி, நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. தற்போது நாடாளுமன்ற தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல்காந்தி லோகோ பைலட்டுகளுக்காக குரல் கொடுக்கும் என்று கூறினார்.
அப்போது அவர் கூறியதாவது:
மோடி அரசால் ரயில் லோகோ பைலட்டுகளின் வாழ்க்கை தரம் புரண்டுள்ளது.
தகிக்கும் வெப்பத்தில் 16 மணி நேரம் வரை வேலை பார்க்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கழிப்பறை போன்ற அடிப்படை வசதி கூட இல்லை. நீண்ட நேரம் வேலை பார்க்கின்றனர். விடுமுறையும் வழங்கப்படுவதில்லை.
இதனால் அவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் பணியாற்றும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவது பொதுமக்களின் உயிர்களுக்கு ஆபத்தாக முடியலாம் என்று கூறினார்.
மேலும், ரயில்வே லோகோ பைலட்டுகளின் உரிமைகளுக்காகவும், அவர்களின் நிலையை முன்னேற்றவும் இந்தியா கூட்டணி நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும் என்று கூறினார்.

