சிவகாசியில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளையை வெட்டிக் கொலை செய்த பெண்ணின் சகோதர்கள் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் கார்த்திக் பாண்டி, 26, இவர் சிவகாசியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை செய்து வந்தபோது. அதே கடைசியில் வேலைசெய்து வந்த சிவகாசி மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த பொன்னையா மகள் நந்தினி குமாரி,22, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாகியுள்ளது.
இவர்களின் காதல் வீட்டாருக்குத் தெரிந்த நிலையில், இவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நந்தினி குமாரியின் அண்ணன்கள் தன்பால முருகன், பாலமுருகன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த எதிர்ப்பை மீறி கார்த்திக் பாண்டி, நந்தினி குமாரியும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பின் இருவரும் அய்யம்பட்டியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் நந்தினி அங்குள்ள ஹவுசிங் போர்டு அருகில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், புதன்கிழமை ஜுலை 24 ஆம் தேதி இரவு 9 மணியளவில் நந்தினி குமாரியை அழைத்துச் செல்வதற்காக கார்த்திக் பாண்டி சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்துள்ளார். அங்கு வந்து, பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த தன பாலமுருகன்27, பாலமுருகன்,26, அவரது உறவினர் சிவா,23, ஆகியோர் கார்த்திக்பாண்டியை வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கார்த்திக் பாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தில் எஸ்.பி., பெரோஸ் அப்துல்லா, டிஎஸ்பி சுப்பையா ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த படுகொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள திருத்தங்கல் போலீஸார் தன பாலமுருகன், பாலமுருகன், சிவா ஆகியோரை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கள் தங்கையை காதல் திருமணம் செய்த கார்த்திக் பாண்டியை பெண்ணின் சகோதரர்களே கொலை செய்தது ஆணவக் கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SinojKiyan

