எல்லோருக்கும் வெளிநாடு சென்று பணியாற்ற வேண்டும் என்ற கனவு இருக்கும். அந்த வகையில் ஜப்பான் சென்று பணியாற்றி வரும் தமிழ் நாட்டைச் சேர்ந்த முனைவர் கணேசன் என்பவர் ஜப்பானின் பணியாற்றி வரும் தன் கம்பெனியில் தன் ஒரு வேளை மற்றும் அலுவலக நேரம், சலுகைகள் இதைப் பற்றி விரிவாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் எக்ஸ் தளபக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
’’ஜப்பானிய கம்பெனி வேலைல என்னோட ஒரு நாள்.
காலைல 8-மணிக்கு வேலை தொடங்கும். கம்பெனி உள்ள நுழையும் போதே ID கார்டு பஞ்ச் பண்ணனும். 10 நிமிசம் முன்னாடியே போயிட்டு யூனிஃபார்ம் போடணும். கம்பெனியோட கிளை மேலாளார், R&D தலைவர், துறைத்தலைவர் முதற்கொண்டு ஒப்பந்தப் பணியாளர்கள் வரை ஒரே அறையில் அவரவர்களுக்கு கொடுக்கப்பட்ட லாக்கரில் இருந்து கம்பெனி சீருடையை எடுத்து போட்டுக்கணும். எல்லாருக்கும் ஒரே மாதிரி சீருடை தான். அனைவரும் சமம்.
எல்லாரும் எல்லார் முன்னாடியும் ஜட்டி பனியனோட அங்கயே தான் உடை மாத்திக்கணும்.
அப்பறம் நம்ம அறைக்கு முன்னாடி உள்ள டைம் ரெக்கார்டர்ல நம்ம ID ஐ பஞ்ச் பண்ணனும்.
அடுத்து சரியா 8 மணிக்கு மணி அடிக்கும். 4 நிமிசம் உடற்பயிற்சி செய்யணும். ரேடியோ தைசோ னு பெயர். அப்பறம் 10 நிமிசம் காலை மீட்டிங். அன்னைக்கு பணியாளர்களுக்கு சொல்லவேண்டிய தகவல், மீட்டிங் உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்து கொண்டப்பின் உறுமொழி எடுக்கணும்.
பாதுகாப்பே முக்கியம், கவனமா இருப்பேன், வேலையை நேரத்துக்கு முடிப்பேன், வேலைல கவனமா இருப்பேன், சாலைல வாகனத்த பாதுகாப்பா இயக்குவேன்னு ஒரு பட்டியல் இருக்கும், அதுல இருந்து இரண்டு உறுதிமொழிகளை ஒரு நாளைக்கு ஒருவர் என சுத்தல்ல போகும்.
அடுத்து வாரத்துல இரண்டு நாள் நம்ம அறைகளை நாம சுத்தம் செய்யணும். மீதி இருக்க மூனு நாள்ல, ஒரு நாள் சாலை பாதுகாப்பு, ஒரு நாள் லேப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி 5 நிமிசம் போகும். இப்படியாக காலைல அரை மணி நேரம் போயிடும்.அடுத்து அவங்கவங்க வேலையை பார்க்கலாம். மதிய உணவுக்கு முன் டீ பிரேக் 10 நிமிசம் எடுத்துக்கலாம். இதுல புகைப்பிடிப்பவர்கள் அவங்க விருப்பம் போல அப்பப்ப புடிச்சிட்டு வருவாங்க.
சரியா 12 மணிக்கு மணி அடிக்கும், மதிய உணவுக்கு. 1 மணி நேரம் உணவு இடைவேளை. பலர் சாப்டுவாங்க. சிலர் சாப்ட மாட்ட்டாங்க. பெரும்பாலும் அரை மணிநேரம் தூங்குவாங்க. வேலைக்கு தயாராக 12:55 க்கு மணி அடிக்கும். அப்புறம் 1 மணிக்கு திரும்பவும் மணி அடிக்கும்.
வேலையை ஆரம்பிக்கலாம். இடையில மறுபடியும் ஒரு டீ பிரேக், தம்முனு போகும். R&D மீட்டிங், குழு மீட்டிங் என வாரத்துல ஒரு நாள் ஓடிடும்.
இந்த மீட்டிங்குகள் காலை 10 முதல் மாலை 3 மணி வரை தான் நடக்கும். இதான் Core வேலை நேரமும் கூட.
4 மணிக்கு அன்றைய வேலைகளை முடிச்சுட்டு வீட்டுக்கு போக தயாராக மணி அடிக்கும். நாம தயாராகிக்கலாம். 4:30 மணிக்கு மணி அடிக்கும் போது நாம ID கார்டை பஞ்ச் பண்ணிட்டு, யூனிஃபார்மை அங்கேயே கழட்டி போட்டுட்டு வந்துடலாம். அவங்களே துவச்சி வெப்பாங்க.
காலைல 8 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை இப்படித்தான் மாலை 4:30 க்கு மணிக்கு முடியும். 7:30 மணி நேரம் வேலை, 1 மணி நேரம் உணவு இடைவேளை, இரண்டு தேநீர் இடைவேளை என அன்றைய நாள் முடிஞ்சது.
அப்புறம் மேளாளர், துறை தலைவர் யாரா இருந்தாலும் பணியாளர்களை முடிக்கிலாம் வேலை வாங்க முடியாது. கூடாது. Labor union வலுவானது. Harassment சட்டங்கள் எல்லாமும் வலுவானது. பணி நிரந்தமாகிட்ட வேலையை விட்டுலாம் தூக்கவே முடியாது. நாமளே வேலைய விட்டு போறேன்னாலும் விட மாட்டாங்க.
சம்பளம் போக ஏகப்பட்ட ஓய்வூதிய திட்டங்கள், பாதுகாப்புகள் என பட்டியல் நீளம்.
இது இங்குள்ள உற்பத்தி தொழிற்சாலைகளின் நடைமுறை. காலைல பகிர்ந்துகொண்டமாதிரி ஜப்பானின் வேலை நேரம் மாசத்துக்கு 200 மணி நேரம் தான், இது 45 மணி நேர ஓவர் டைம் வேலையையும் உள்ளடக்கியது. ஓவர் டைம் ஒருவரின் தேவை வசதிக்கேற்ப தான் செய்வாங்க. Production ல இருக்கவங்களுக்கு அதிக்கான தேவையும் இருக்காது. அடுத்த shift ஆட்கள் வந்துடுவாங்க. 2-வது 3-வது shift வேலை செய்றவங்களுக்கு கூடுதல் சம்பளம் அதனால ஓவர் டைம் தேவையும் இவங்களுக்கு இல்ல.
IT துறைக்கு இந்த விதிகளெல்லாம் பொருந்த வாய்ப்பில்ல’’ என்று தெரிவித்துள்ளார்.

